ராய்ப்பூர்: அகமதாபாத்தில் இருந்து ராய்ப்பூருக்கு விமானத்தில் வந்து காதலை ஏற்க மறுத்த தனது காதலியை 51 முறை கத்தியால் குத்தி கொன்ற காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியை சேர்ந்த நீல் குசும் பன்னா (20) என்பவரும், அதேபகுதியை சேர்ந்த ஷாபாஸ் (25) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப்பில் பேசினர். ஆனால் இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஷாபாஸிடம் பேசுவதை நீல் குசும் பன்னா தவிர்த்து வந்தார். இருந்தும் நீல் குசும் பன்னாவிடம் ஷாபாஸ் ெதாடர்ந்து பேசமுற்பட்டார். இதற்கிடையே வேலை காரணமாக அகமதாபாத்திற்கு ஷாபாஸ் சென்றிருந்தார்.
அங்கிருந்தும் நீல் குசும் பன்னாவிடம் பேசமுற்பட்டார். ஆனால் அவர் ஷாபாஸிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். அதனால் ஆவேசமடைந்த ஷாபாஸ் அகமதாபாத்திலிருந்து விமானம் மூலம் ராய்பூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கோர்பாவுக்கு வந்தார். வீட்டில் நீல் குசும் பன்னா தனிமையில் இருக்கும் போது, அங்கு ஷாபாஸ் சென்றார். அவரிடம் தன்னை ஏன் புறக்கணிக்கிறாய்? எனக் கேட்டு வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் நீல் குசும் பன்னாவை கீழே படுக்கவைத்து, அவரை தலையணையால் அழுத்தி கொன்றார். இதற்குப் பிறகு, கூர்மையான கத்தியால் நீல் குசும் பன்னாவின் மார்பு, தொண்டை, முகம், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் குத்திக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றார்.
மாலையில் நீல் குசும் பன்னாவின் பெற்றோர் வீடு திரும்பிய போது, அவரது மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் நீல் குசும் பன்னாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட ஷாபாஸ், தனது காதலியான நீல் குசும் பன்னாவை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டு, கத்தியால் அவரது உடலில் 51 முறை குத்தியுள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. தனது காதலியை கொன்றுவிட்டு அகமதாபாத்திற்கு ஷாபாஸ் தப்பிச் சென்றுவிட்டார். சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ராஜ்நந்த்கானில் பதுங்கியிருந்த ஷாபாசை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர். சமீபத்தில் டெல்லியில் இளம்பெண் தனது காதலனால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தற்போது சட்டீஸ்கரிலும் காதலி ஒருவர் அவரது காதலனால் 51 முறை குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.