"என்னை கொள்ளையடிக்கச் சொல்கிறீர்களா?"- மகன் குறித்து கேள்வியெழுப்பிய நிர்வாகி; கடுகடுத்த ப.சிதம்பரம்

`வறுமையில் வாடும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கார்த்தி சிதம்பரம் ஒரு 100 ரூபாய் கொடுக்க முடியாதா?’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் காங்கிரஸ் நிர்வாகி கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மானாமதுரை கூட்டத்தில்

அப்போது கட்சியினர் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். ‘சில நாள்களுக்கு முன்பு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி., கலந்துகொண்ட கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு, சில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு முறையாக அழைப்பு கொடுக்கவில்லை’ என்று சிலர் வாக்குவாதம் செய்தனர். அதன் பிறகு சமாதானம் செய்து அவர்கள் அமரவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், “கடந்த தீபாவளிக்கு 27 வார்டுகளிலும் உள்ள தி.மு.க நிர்வாகிகளுக்கு அந்தக் கட்சி சார்பில் ரூ.1,000 வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோல, நம் கட்சியிலும் வறுமையிலுள்ள நிர்வாகிகளுக்கு எம்.பி கார்த்தி சிதம்பரம் ஒரு 100 ரூபாய் கொடுக்க கூடாதா?” என்று ப.சிதம்பரத்தை பார்த்து கேள்வி எழுப்பினார்.

கார்த்தி சிதம்பரம்

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ப.சிதம்பரம், “கொள்ளையடித்தால்தான் நமது கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்க முடியும். அப்போ, என்னை கொள்ளையடிக்க சொல்கிறீர்களா? தவறு செய்யச் சொல்கிறீர்களா? எம்.பி நிதியிலிருந்து கான்ட்ராக்ட் எடுத்து அதில் 10 சதவிகிதம் கமிஷன் வாங்கி கொடுக்கச் சொல்கிறீர்களா?” என்று, தன்னிடம் கேள்வி கேட்ட நிர்வாகியிடம் கேட்க, அந்த இடம் பரபரப்பானது.

அதன் பின்னர் கூட்டம் முடிந்து, நிர்வாகிகள் கிளம்பிச் சென்றனர். இது குறித்து பேசும் காங்கிரஸ் கட்சியினர், “ஏதோ கோடிக்கணக்கில் கட்சியினர் உதவி கேட்பதுபோல் ப.சிதம்பரம் பதில் சொல்கிறார். சாதாரண உள்ளாட்சி பிரதிநிதிகள்கூட தங்கள் சொந்த செலவில் கட்சியினருக்கு உதவி செய்கின்றனர்.

ப.சிதம்பரத்திடம் கேட்கும் காங்கிரஸ் நிர்வாகி

தனிப்பட்ட முறையில் நல்ல வசதியாக இருக்கும் கார்த்தி சிதம்பரம், தொகுதியின் எம்.பி என்ற முறையில் தேர்தலில் உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளிக்கு சிறு பரிசு தரக்கூடாதா என்று உரிமையோடு கேட்டதற்கு ப.சிதம்பரம் இப்படி பதிலளிக்கிறார். காலமெல்லாம் இவருக்கும், இவர் மகனுக்கும் பல்லக்கு தூக்குவது மட்டும்தான் கட்சியினரின் வேலை என்று நினைத்து விட்டார் போல” என்று புலம்புகிறார்கள் மானாமதுரை வட்டார காங்கிரஸ் கட்சியினர். இது சம்பந்தமான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.