“கோபாலபுரம் பாய்ஸைவிட மாட்டேன்; இதுவரை நடந்த ஊழல்களுக்கு அக்கவுன்ட் கேட்பேன்!" – அண்ணாமலை

தருமபுரியில் இன்று மாலை மாவட்ட பா.ஜ.க சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் ராமலிங்கம், மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘‘சென்னையில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், எம்.பி கனிமொழி பங்கேற்றார். கூட்டத்திலிருந்து ஒரு பெண் காவலருக்கு, இரண்டு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர். பெண் காவலர்கள்மீது கைவைத்த அயோக்கியர்கள் மீது, இதுவரை ஒரு வழக்குகூட பதிவுசெய்யவில்லை.

இந்தச் சம்பவத்தைக்கூட போஸ்டராக அடித்து, ‘திராவிட மாடல்’ என தி.மு.க சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏதாவதொரு மாநிலத்தில், இது போன்று நடந்தால் கனிமொழி பேட்டி கொடுப்பார். அக்கா கனிமொழி… இது உங்கள் கூட்டத்தில் நடந்திருக்கிறது, இதற்காக நடவடிக்கை எடுங்கள்.

தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் துறையின் பணியை விட்டுவிட்டு, பா.ஜ.க தொண்டர்களை கைதுசெய்வதைத்தான் பணியாக மேற்கொண்டு வருகின்றனர். ‘கோபாலபுரம் பாய்ஸ்’ஐ விடமாட்டேன், ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம், 1967 முதல் இதுவரை, 2.5 லட்சம் கோடிக்கு மேல் நடந்திருக்கும் கூட்டுக்கொள்ளை, ஊழல்கள் குறித்த, அக்கவுன்ட் கேட்கப்போகிறேன்.

இதுவரை, மூன்றில் ஒரு பங்கு ஆட்சியை முடித்திருக்கும் தி.மு.க ஆட்சியில், இதுவரை நமக்கு கிடைத்து ஒன்றுதான், அது ஏமாற்றம் மட்டும்தான். தப்பிப்தவறி இவர்கள் நிறைவேற்றிய, பெண்களுக்கு இலவச பஸ் திட்டத்தில், மகளிர் பயணித்தால் அவர்களுக்கு கிடைக்கும் பட்டம், ‘ஓசி’ல போனீங்க’ என்பதுதான்.

தருமபுரி மாவட்டதுக்கு இதுவரை, நல்ல வேலைவாய்ப்பு, தொழில்துறை, காவரி தண்ணீரை விவசாயிகளுக்கு முறையாக கொடுக்க முடியாத வகையில் தி.மு.க ஆட்சி நடக்கிறது. தாங்கள் இந்த மாவட்டத்தை மேம்படுத்த முடியாத காரணத்தால் மட்டுமே, ‘ஆடத்தெரியாதவன் மேடையை பார்த்து கோணல்’ என்பது போல, தருமபுரி மாவட்டத்தை முன்னேறாத மாவட்டம் என்கின்றனர். தருமபுரியில் சாதியை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர். வரும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘நாற்பது நமதே’ என்கிறார் முதல்வர் ஸ்டாலின். 40-ல் 4-ஐ அழித்துவிடுங்கள், 0 மட்டுமே உங்களுக்கு கிடைக்கப்போகிறது.

அண்ணாமலை

தேர்தல் அறிக்கையில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தருவோம் எனக் கூறினார்கள். ஆனால், இன்றைக்கு தருமபுரி போன்ற மாவட்டங்களில், படித்துவிட்டு பலரும் வேலை கிடைக்காமல் அலைமோதுகின்றனர். தமிழகத்தில், 2021-ல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 8.6 லட்சம் பேர் பதிவுசெய்துள்ளனர். ஆனால், 2,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது, ‘நடிகர் வடிவேல் பாக்கெட்டில் கைவிட்டு ஒன்றுமில்லை’ எனக் கூறுவது போல் உள்ளது. இதற்கெதுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை என்ற துறை?

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை உருவாக்கியதாக பெருமை பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ‘பேஸ் 1‘ நிறைவேற்ற முதலில், 1,334 கோடி ரூபாய் நிதி போதுமென தீர்மானிக்கப்பட்டு பின், 1,928 கோடி செலவு செய்துள்ளனர். இது குறித்து மத்திய அரசின், கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) 2021-ல் ஆய்வு செய்ததில் இத்திட்டத்தை, ‘It’s a failure’ எனக் கூறியுள்ளனர்.

தருமபுரியில் குடிநீரில் ‘புளூராய்டு’ அதிகமாக இருப்பதுதான் பிரச்னை, ஒரு லிட்டரில் ஒரு மில்லி கிராம்தான் ‘புளூராய்டு’ இருக்க வேண்டுமென WHO சொல்கிறது. பல கோடி செலவு செய்யப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இப்போது பரிசோதனை செய்ததற்கு, 1.5 மில்லி கிராம் இருக்கிறது என்ற அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

இப்படியிருக்கையில், 4,500 கோடியில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் ‘பேஸ் 2’ திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தில் ஜாலியாக இருக்கப்போவது அமைச்சர் கே.என்.நேரு தான். அதேபோல், தருமபுரிக்கு தி.மு.க எம்.பி இருப்பதே ‘வேஸ்ட்’, இந்த எம்.பி-யை பிடிக்கணும்னா, ஒரு சூடத்த பத்த வெச்சா போதும். திராவிட மாடல் ஆட்சில யார்றா பூஜை பன்றதுன்னு சொல்லிட்டு வந்துருவாரு. தேர்தலின்போது சாதியைக்கூறி ஓட்டு வாங்கிய இந்த எம்.பி மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை. வளர்ச்சிக்கான அரசு அமைய மக்களே பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும்” என்றார் காட்டமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.