பெங்களூரூ: என் சாவுக்கு பாஜக எம்எல்ஏ-தான் காரணம்: கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை

பெங்களூருவில் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பெங்களூரு கனகபுரா சாலை ககலிபுரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் காரில் இருந்து திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காரின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது டிரைவர் இருக்கையில் ஒரு இளைஞர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக ககலிபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காரில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் பிரதீப் என்பதும், அவர் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் பிரதீப் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் பிரதீப் தற்கொலை செய்துகொண்ட காரில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் உள்பட 6 பேரின் பெயர்களை பிரதீப் எழுதி வைத்திருந்தது, தெரியவந்தது.
அந்த கடிதத்தில், பப் வைப்பதற்காக பிரதீப் ரூ.2½ கோடி ரூபாயை 5 பேரிடம் கொடுத்துள்ளார். ஆனால், பப் வைக்கும் விவகாரம் தொடர்பாக பிரதீப்புக்கும், 5 பேருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இதனை தீர்க்க பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பணம் கேட்டுள்ளார். அந்த பணத்தை கொடுத்தும் பிரச்னை தீரவில்லை எனவும், இதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு பாஜக எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் தான் காரணம் என்றும் பிரதீப் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து கடிதத்தை கைப்பற்றியுள்ள ககலிபுரா போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.