ஆங்கில புத்தாண்டை தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அதே போன்று மது பிரியர்களும் தங்களுக்கு தேவையான மது வகைகளை நண்பர்களுடன் அருந்தி புத்தாண்டை வரவேற்றனர். இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று வேலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச் சந்தையில் மதுபானங்கள் மற்றும் கள்ள சாராயம் விற்பதை தடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் எல்லை பகுதியில் செக்போஸ்ட் அமைத்து வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் வேலூர் மாவட்டத்தில் மது மற்றும் கள்ள சாராயம் கடத்தலில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 100 மது பாட்டில்கள் உட்பட 22 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.