கடந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்றுதான் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’. இன்றைய கால காதலை நகைச்சுவையான முறையிலும் உணரவுப்பூர்வமான முறையிலும் மக்களிடம் கொண்டு சேர்த்த படம் இது. பிரதீப் ரங்கநாதனின் இரண்டாவது படமான இதில் அவரே நடித்தும், படத்திற்கு கதையும் எழுதியிருந்தார். இப்படத்திற்கு பிறகு ரசிகர்களின் மத்தியில் இவருக்கு பேரும், புகழும் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்த படம் 2022ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் முதல் பத்து இடத்தை பிடித்திருக்கிறது. ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, ரவீனா ரவி, சத்யராஜ், ராதிகா சரத்குமார், நவீன் கிருபாகர் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தெலுங்கு மொழியிலும் ‘லவ் டுடே’ படம் மொழிமாற்றம் செய்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, தெலுங்கு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ரூ.7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த ரூ.90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் லாபத்தை ஈட்டி தந்தது. பலதரப்பு ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்த இந்த ‘லவ் டுடே’ படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் தயாரிப்புக்குழு கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
ஹிந்தி ரீமேக்கிற்கான உரிமையை பெரிய அளவு தொகையை கொடுத்து படக்குழு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பல ரசிகர்களின் ஃபேவரைட் நாயகனான வருண் தவான் ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, இவர் இதுபோன்று ஏற்கனவே பல ரீமேக் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதேசமயம் ‘லவ் டுடே’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை பிரதீப் தான் இயக்கப்போகிறாரா அல்லது படக்குழுவினர் வேறு யாரையும் தேர்வு செய்யபோகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.