Vijay 67: தொடங்கியது படப்பிடிப்பு; விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், மனோபாலா உள்ளிட்டோர் பங்கேற்பு!

கடந்த நவம்பரில் பூஜை போடப்பட்ட விஜய், லோகேஷ் கனகராஜின் ‘விஜய் 67’க்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.

இது குறித்து இயக்குநரும் நடிகருமான மனோபாலா, “தளபதி 67 இன்று படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதி இருவரும் ஒரே எனர்ஜியில் ஃபுல் ஸ்விங்கில் உள்ளனர். முதல்நாளே, தூள்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

விஜய் – த்ரிஷா

‘மாஸ்டர்’ படத்துக்குப் பின் விஜய் – லோகேஷ் இணையும் படமிது. கடந்த டிசம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ‘வாரிசு’ படத்துக்குப் பின்னர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு விஜய், வெளிநாடு செல்ல உள்ளதால் ஜனவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார்கள்.

அதன்படி இன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. வழக்கமாக ஈ.வி.பி அல்லது கோகுலம் ஸ்டூடியோஸில்தான் விஜய்யின் படப்பிடிப்பு தொடங்கும். ஆனால், இந்த முறை சென்னைக்குள்ளேயே படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இங்கேதான் ‘இந்தியன் 2’க்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

‘வாரிசு’ படத்தில்…

இன்று நடக்கும் ‘விஜய் 67’ படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், மனோபாலா ஆகியோர் தொடர்பான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். முன்னதாக, சென்ற வாரத்தில் இப்படம் குறித்த டெஸ்ட் ஷூட் ஒன்றையும் நடத்தியிருந்தார் லோகேஷ். இப்போது, சத்தமே இல்லாமல் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். அஜித்தின் ‘துணிவு’ டீசர் டிரெய்லர் வெளியாகிவிட்டது. ஆனால் விஜய்யின் ‘வாரிசு’ டீசர் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. ‘வாரிசு’ டீசர் எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய்யின் ரசிகர்களுக்கு ‘விஜய் 67’ படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து, வட இந்தியாவில் படப்பிடிப்புக்குக் கிளம்புகின்றனர். காஷ்மீர், டெல்லி எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.