`3 மாதங்களில் இது மத்திய அரசு கவனத்துக்கு போகணும்’-செயற்கை கருவூட்டல் பற்றி உயர்நீதிமன்றம்

`செயற்கை கருவூட்டல் செய்யும் தம்பதியினருக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்’ என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் குழந்தை பெறுவதில் கணவர், மனைவி ஆகியோரிடம் குறைபாடுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் பிரபலங்கள் சிலர் வாடகைக் தாய் மற்றும் செயற்கை கருத்தரிப்பு போன்ற தொழில்நுட்பம் மூலம் குழந்தை பெற்றுகொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவைகள் முறையாக விதிகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது. குறிப்பாக வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறுவோர் மீது பல குற்றச்சாடுகள் முன்வைக்கப்படுகிறது. அந்த வகையில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன், திருமணமான 4 மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதும் சர்ச்சையானது. பின் தம்பதியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
image
இந்த நிலையில், செயற்கை கருவூட்டல் செய்யும் தம்பதியினருக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வயதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதனை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் தேசிய உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் வாரியத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 4) உத்தரவு பிறப்பித்துள்ளது.
செயற்கை கருவூட்டல் செய்ய விரும்பும் தம்பதிகளில் ஆணுக்கு 55 வயதையும், பெண்ணுக்கு 50 வயதையும் நிர்ணயம் செய்து மத்திய அரசானது உத்தரவிட்டிருந்தது. இந்த வயதை கடந்தால் செயற்கை கருவூட்டலுக்கு அனுமதி கிடையாது எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வயது வரம்பு தனிப்பட்ட சுதந்திரத்தினை மறுப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
image
இவ்வழக்கு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வயது வரம்பானது தனிப்பட்ட சுதந்திரத்தை மறுப்பதாக இருக்கிறது. மருத்துவச் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு இது சர்வாதிகாரமாகவும், பகுத்தறிவற்றதாகவும் உள்ளது. எனவே செயற்கை கருவூட்டல் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் தேசிய `உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் வாரியம்’ இதனை மூன்று மாதங்களில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.