மகா பெரியவா வாழ்க்கையை சீரியலாக்கும் பாம்பே சாணக்யா

இயக்குநர் பாலசந்தரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் பாம்பே சாணக்யா. தேன்மொழியால், நான் அவன் இல்லை, காமெடி காலனி, சாந்தி நிலையம் ஆகிய சீரியல்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் தற்போது காஞ்சி மகா பெரியவா என்று அழைக்கப்படும் பரமாச்சாரியார் மகாசுவாமிகளின் வாழ்க்கை வரலாறை நெடுந்தொடராக இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து அண்மையில் பேட்டி அளித்துள்ள சாணக்யா, 'நான் ஏற்கனவே இந்திய சுதந்திரத்திற்கு முன் அக்ரஹார வாழ்க்கை முறையை 'கர்மா' என்ற சீரியலில் இயக்கியிருந்தேன். அந்த சீரியலுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அப்போதே பலரும் என்னிடம் மகா பெரியவா பற்றி சீரியல் இயக்க சொல்லி கேட்டிருந்தனர். மகா பெரியவரின் போதனைகள் அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில், இந்த தொடரை நான்கு தலைமுறைகள் கொண்ட ஒரு குடும்ப கதையாக இயக்கி வருகிறேன். மகா பெரியவருக்கு பாகுபாடு இல்லை. பட்டியிலின மக்கள் வசிக்கும் இடங்களுக்கும் சென்றிருக்கிறார். இஸ்லாமியர் கிறிஸ்துவர்கள் என பல மதத்தினரும் அவரை பின்பற்றுகின்றனர். எனவே, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் என்றில்லாமல் அனைவருக்கும் சென்று சேரும்படி இந்த சீரியலை உருவாக்கியுள்ளேன்' என்று கூறியுள்ளார்.

வருகிற ஜனவரி 8 ஆம் தேதி, மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜனவரி 7 ஆம் தேதி முதல் சங்கரா தொலைக்காட்சியில் மகா பெரியவா தொடர் ஒளிபரப்பாகும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.