ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்: ஷங்கர் மிஸ்ராவுக்கு 14 நாட்கள் சிறை!

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷங்கர் மிஸ்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த விவகாரம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா, 34, என்பது தெரிய வந்தது. இதை அடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுநீர் கழித்த போதை ஆசாமி பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரிய வந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த ஷங்கா மிஸ்ராவை டெல்லி தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 6 வாரங்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

இதை அடுத்து, பெங்களூரில் இருந்து ஷங்கர் மிஸ்ராவை டெல்லிக்கு தனிப்படை போலீசார் அழைத்து வந்தனர். தொடர்ந்து, இன்று மாலை, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஷங்கர் மிஸ்ராவை போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டனர். இதை நிராகரித்த நீதிமன்றம், ஷங்கர் மிஸ்ராவை நீதிமன்றக் காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதன்படி சிறையில் அவர் அடைக்கப்பட்டார். நேற்று, போதை ஆசாமி ஷங்கர் மிஸ்ராவை, அவர் பணியாற்றி வந்த “வெல்ஸ் பார்கோ” என்ற பன்னாட்டு நிறுவனம் டிஸ்மிஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.