'தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டியது முக்கியம்' – கி.வீரமணி

2023 ஆம் ஆண்டிலும் தீண்டாமைக் கொடுமையா? கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் முன்னிலையிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர் வடை கேட்டபோது, தேநீர்க் கடைக்காரர் கொடுக்க மறுத்துள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயலில் ஒடுக்கப்பட்ட மக்கள் குடிநீரில் மலங்கலந்த கொடுமைபற்றிய செய்தி வெளிவந்தது. இதுகுறித்து ‘விடுதலை’யில் (30.12.2022) கண்டித்து தலையங்கமும் தீட்டப்பட்டது. அதே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பெருங்காடு கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தனர். இதற்கு மாற்று ஜாதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், ஆபாசமாகத் திட்டி, அவர்களின் உடைகளையும் வீசி எறிந்துள்ளனர். இதுகுறித்த புகாரின்மீது காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர் என்பது ஒரு செய்தி.

தீண்டாமை ஒழிப்பும், ஜாதி ஒழிப்பும் நமது கண்ணான கொள்கை! அறந்தாங்கிப் பகுதியில் மற்றொரு தீண்டாமைத் தொடர்புடைய கொடுமை! அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு என்ற இடத்தில், தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் முன்னிலையிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர் வடை கேட்டபோது, தேநீர்க் கடைக்காரர் கொடுக்க மறுத்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் நமது ‘திராவிட மாடல்’ அரசில் ஒரு துளிக்கூட நடக்க அனுமதிக்கக் கூடாது. தீண்டாமை ஒழிப்பும், ஜாதி ஒழிப்பும் நமது கண்ணான கொள்கை!

குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இவ்வளவுக்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர். தமது வாட்ஸ் அப் எண்ணையும் விளம்பரப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. உடனடியாகச் செயலிலும் இறங்குகிறார்!

தீண்டாமை சட்டப்படி குற்றம் – மனிதாபிமானத்துக்கும், மனித உரிமைக்கும் எதிரானது என்பது போன்ற விளம்பரங்களை அரசு சார்பில் வெளியிட்டு, இதில் ஒரு புதிய திருப்பத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். முன்பு காமராசர் ஆட்சியில் இதுபோன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டதுண்டு.

கழகத் தோழர்களின் கவனத்திற்கு… 2023-லும் தீண்டாமையா? இதனை அனுமதிக்கவே கூடாது. கழகத் தோழர்கள் கவனத்துக்கு வரும் இதுபோன்ற தகவலை உடனடியாகத் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்கவேண்டும். களப் பணியிலும் உடனடியாக இறங்கவேண்டும்! இது வெறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, சமூக மாற்றம்பற்றி தீவிரப் பிரச்சாரம் செய்யவேண்டிய பிரச்சினையும்கூட. திராவிடர் கழகம் இதில் தீவிர முனைப்புக் காட்டும்! 2023-லும் மனிதம் மலர வேண்டாமா? மலம் கலந்த குடிநீரைக் குடிக்க வேண்டுமா? இதற்கொரு முடிவு கட்டிய வேண்டியது முக்கியம்! முக்கியம்!!” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.