பழனி மலைக்கோயில் உண்டியல் கடந்த 20 நாட்களில் உண்டியல்கள் நிறைந்ததால் இரு நாட்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூ.3.80 கோடியை தாண்டியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 20 நாட்களில் நிறைந்தது.
இதையடுத்து பழனி உண்டியல்கள் இரண்டு நாட்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. எண்ணிக்கையின் மொத்த தொகையாக ரொக்கம் மூன்று கோடியே 80 இலட்சத்து 45 ஆயிரத்து 807 ரூபாய் கிடைத்துள்ளது.
பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி, மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 855 கிராமும், வெள்ளி 10,631 கிராமும் ,வெளிநாட்டு கரன்சி 574 நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன.
உண்டியல் எண்ணிக்கை முழுவதும் பல்வேறு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. உண்டியல் எண்ணிக்கையின் போது பள்ளி, கல்லூரி மாணவிகள், வங்கி அதிகாரிகள், கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மலைக்கோவிலில் முருகனது அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகின்றனர்.