`எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரிலயே… இன்னொரு குளிர் அலை வேற இருக்கே’- பீதியில் வடஇந்தியா!

“வடஇந்தியாவில் நிலவும் குளிரால், அதிகபட்ச வெப்பநிலையும் ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிடும்” என வானிலை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடஇந்தியாவில் கடுமையான குளிர் அலை வீசுவதால், மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்கள் கடுமையான குளிர் மற்றும் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு, வெப்பநிலை -4°C அளவுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. ’இப்படியே போனால், அங்கு அதிகபட்ச வெப்பநிலையும் ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிடும்’ என வானிலை நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
image
இதுகுறித்து லைவ் வெதர் ஆஃப் இந்தியா என்ற ஆன்லைன் வானிலை தளத்தின் நிறுவனரான நவ்தீப் தஹியா, “என் வாழ்நாளில் இந்த அளவுக்கு குறைந்த வெப்பநிலை செல்சியஸை, இதுவரை பார்த்ததில்லை. வெப்பநிலை -4°C அளவுக்கு குறையும் நிலையில், அடுத்து தொடங்க இருக்கும் மற்றொரு குளிர் அலையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் ஜனவரி 14-19 தேதிகளில் குளிர் அலை உச்சமாக இருக்கும். சமவெளிகளில் உறைபனி -4°c முதல் +2°c வரை இருக்கக்கூடும். இப்படியே போனால், அதிகபட்ச வெப்பநிலையும் ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இவருடைய செய்தியை இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனவரி 15-16 ஆகிய தேதிகளில் முதல் வட இந்திய மாநிலங்களில் குளிர் அலை மற்றும் அதிக பனிப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.