தமிழ் மக்களின் நிலங்களை தாரை வார்ப்பதா?… அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள 60 கிராமங்களிலிருந்து ஏழை, எளிய மக்களின் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்க முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. நெய்வேலி நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க இந்திய ஒன்றிய அரசு முடிவு செய்துவிட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு நிலங்களை அபகரித்து அளிக்க தமிழ்நாடு அரசு அவசரம் காட்டுவது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

பெருந்தமிழர் ஜம்புலிங்கனாரின் பெருங்கொடையாலும், பெருந்தலைவர் காமராசரின் சீரிய முயற்சியாலும், தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், உருவானது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமாகும். இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காகத் தங்கள் நிலங்களை விட்டுக்கொடுத்த நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பூர்வகுடி தமிழர்களின் நிலை இன்றுவரை பரிதாபகரமாக உள்ளது மிகுந்த வேதனைக்குரியது. நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்கள் தற்போது ஒப்பந்த தொழிலாளர்களாக, வெறும் கூலிகளாக மட்டுமே வேலைசெய்யக்கூடிய அவலநிலை நிலவுகிறது. அந்தளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி, வடவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் வடவர்களே நியமிக்கப்பட்டு, மண்ணின் மைந்தர்கள் முற்றிலும் இல்லாத கொடுஞ்சூழலே உள்ளது.

மேலும், ஒரு பேரிடியாக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை 2025ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்க இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. தனியாருக்குத் தாரைவார்க்க போகும் நிறுவனத்திற்காக தமிழ் மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பறித்து ஒப்படைக்க தமிழ்நாடு அரசு அவசரம் காட்டுவது ஏன்? ஏற்கெனவே நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தமிழ் இளைஞர்களுக்குப் பணி வழங்காமலும் இனப்பாகுபாடு கடைப்பிடிக்கிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம்.

திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணிக்கும் நெய்வேலி நிறுவனத்திடம் பேசி தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காத தமிழ்நாடு அரசு, நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்பு காட்டுவது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். தமிழர்களுக்கு உறுதியளித்தபடி வேலையும், உரிய இழப்பீடும் வழங்காதபோது, எதற்காக தமிழர் நிலங்களைப் பறித்து நிலக்கரி நிறுவனத்திடம் வழங்க அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் துடிக்கிறார்கள்? அவர்களுக்கு ஏதாவது பெருத்த லாபம் இதன் மூலம் கிடைக்கவிருக்கிறதோ?

ஏற்கெனவே நிலக்கரி எடுப்பதற்காக தமிழர்களிடம் பறிக்கப்பட்ட நிலங்களில் 10000 ஏக்கர் இன்னும் பயன்படுத்தாது இருப்பில் உள்ள நிலையில், மேலும் 25000 ஏக்கர் நிலங்களை வலுக்கட்டாயமாக எதற்குப் பறிக்க வேண்டும்? நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், மக்கள் நிலங்களைத் தர முன்வரமாட்டார்கள் என்பதால் அதற்கு முன்பே நிலங்களைக் கையகப்படுத்த வேண்டுமென்ற இந்திய ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டத்திற்கு திமுக அரசும் துணைபோகிறது. இதுதான் பாஜகவின் தமிழர் விரோதப்போக்கை எதிர்க்கும் திமுகவின் திராவிட மாடல் அரசா? பொதுத்துறை நிறுவனமாக இருந்தபோதே உரிய இழப்பீடும், நிரந்தரப் பணியும் முறையாக வழங்காது நிலம் வழங்கிய தமிழர்களை நீதிமன்றத்திற்கு அலையவிட்ட நிலையில், தனியார் மயமாகப்போகும் நிறுவனத்தை நம்பி எப்படி தமிழர்கள் தங்கள் நிலங்களை ஒப்படைக்க முடியும்? இது முழுக்க முழுக்க தமிழர்களை தங்களது சொந்த மண்ணில், நிலமற்ற கூலிகளாக, அகதிகளாக மாற்ற பாஜக, திமுக இணைந்து நடத்தும் கூட்டுச்சதியேயாகும். இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கு இனியும் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள்.

ஆகவே, விரைவில் தனியார் மயமாகவிரூக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களைத் தாரைவார்ப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.