ஓசூரில் வேலைவாய்ப்பு: 15 ஆயிரம் பேருக்கு சான்ஸ்… அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி பேசுகையில், ஒசூரில் அமையவுள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 6 ஆயிரம் பெண்களுக்கு வேலை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கிராமத்தில் உள்ள பெண்களுக்கு தெரியாமல் உள்ளது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்களா? அரசின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது எனக் கேள்வி எழுப்பினார்.

ஓசூரில் வேலைவாய்ப்பு

அதற்கு பதிலளித்த தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டாடாவின் விரிவாக்கம் செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 6 ஆயிரம் பேர் மட்டுமல்ல. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கும் சூழல் காணப்படுகிறது. ஓலா, டாடா என எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் ஓசூரில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கின்றன. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களில் நேர்முகத் தேர்வை நடத்தி உள்ளார்கள். குறிப்பாக தென் மாவட்டங்களிலும் தேர்வு நடத்தி, அதன்மூலம் ஓசூரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்துறை ஒத்துழைப்பு

இதுகுறித்த முழு விவரத்தையும் விளம்பரமாகவே டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தருவதில் மாநில அரசின் தொழிற்துறையும் கைகோர்த்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி பேசுகையில், திண்டுக்கல் அருகே ஆம்வே தொழிற்சாலை மத்திய அரசின் வரி விதிப்பு காரணமாக மூட வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசின் கவனத்திற்கு வந்திருக்கிறதா?

திண்டுக்கல் தொழிற்சாலை மூடலா?

அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று கேள்வி எழுப்பினார். அதற்கு, அந்த நிறுவனம் மூடப்படுகிறதா? எந்த காரணத்திற்காக மூடப்படவுள்ளது? உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் அரசுக்கு முறையாக வரப் பெறவில்லை. ஒருவேளை உரிய தகவல் கிடைக்கும் பட்சத்தில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், மதுரை டூ தூத்துக்குடி வரை பொருளாதார வழித்தடம் என்ற பெயரில் திட்டம் ஒன்றை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

மதுரை டூ தூத்துக்குடி தொழில் வாய்ப்புகள்

இதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை தற்போதைய அரசு கவனம் செலுத்தி ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறதா? எனக் கேள்வி எழுப்பினார். தொழில் முதலீடுகள் தமிழகம் முழுவதும் சமச்சீரான வகையில் வர வேண்டும். இதற்காக கிளஸ்டர் முறையை கொண்டு வந்துள்ளோம்.

அதில் தெற்கு கிளஸ்டரில் உள்ள மாவட்டங்களுக்கு பெரும்பாலான தொழில் முதலீடுகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட சேது சமுத்திர திட்டம் தீர்மானத்தின் அடிப்படையில் பார்த்தால் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் எனக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.