காஞ்சிபுரத்தில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
செவிலிமேடு அடுத்துள்ள குண்டுகுளம் காட்டுப்பகுதியில் நேற்று இரவு 7 மணி அளவில் கல்லூரியில் பயிலும் காதலர்கள் 2 பேர் தனிமையில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் மற்றும் வாகனத்தை பறித்துள்ளனர்.
அத்துடன் காதலன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இளம்பெண்ணை நான்கு பேரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே கூறினால் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
காதலர்கள் இருவரும் அங்கிருந்து செல்லும்போது செவிலிமேடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் 12 மணி நேரத்திற்குள் குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த ஊமை மணிகண்டன், விமல், தென்னரசு மற்றும் ஊக்கு என்கிற சிவகுமார் ஆகிய நான்கு குற்றவாளிகளையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.