நடிகர்களும், பிரபலங்களும் அவர்களின் ஆடைக்காகவும் அணிகலனுக்காகவும் அதிகமாகக் கவனிக்கப்படுவதுண்டு. அந்த வகையில், மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து 2022 பட்டத்தைப் பெற்ற அன்னா சுயாங்கம் – ஐயாம் அணிந்திருந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.

ப்ரிலிமினரி சுற்றில் மேடையில் வலம் வந்த இவரின் ஆடை அனைவரையும் கவர்ந்துள்ளது. அப்படியென்ன ஆடை இவர் அணிந்திருந்தார்? இவர் என்ன வகை ஆடை அணிந்திருந்தார், அதற்கான காரணம் என்ன என்பதை மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்தின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டுள்ளது.
அதில், “ `நீங்கள் பிறந்த இருண்ட சூழலில் சிக்கிக் கொள்ளாதீர்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றும் சக்தி உங்களிடம் இருப்பதாக நம்புங்கள்’ என அன்னா சுயாங்கம் – ஐயாம் சொன்ன வார்த்தைகள், அவரது குணத்தை துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.
குப்பை அள்ளும் தந்தை, தெருவைத் துடைக்கும் தாய், கன்னியாஸ்திரியான கொள்ளுப் பாட்டி இவரை வளர்த்தனர். அவருக்குள் இருந்த விடாமுயற்சியும், உறுதியும், நம்பிக்கையும் அவரை வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிக்கு இட்டுச் சென்றது. அவர் `குப்பை அழகு ராணி’ என்று சிலரால் அழைக்கப்பட்டாலும், அவர் விலைமதிப்பற்ற ரத்தினமாகப் பிரகாசிப்பதை அது ஒருபோதும் தடுக்காது.
அவரது வாழ்க்கைக் கதையிலிருந்து, இந்த `மறைக்கப்பட்ட விலைமதிப்பற்ற வைர ஆடை’ மூலம் ஒரு செய்தி தெரிவிக்கப்படுகிறது. குளிர்பான கேன்களில் பயன்படுத்தப்பட்ட அலுமினிய புள் டேப்ஸ்கள் (pull tabs) மறுசுழற்சி செய்யப்பட்டு, மணிரட் என்பவரால் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டது’’ என்று பதிவிட்டுள்ளது.
தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது. தன்னுடைய குடும்ப பின்னணியைக் குறித்து கவலை கொள்ளாமல், உயர் இடத்தை அயராது உழைத்துப் பிடித்த அழகிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.