Happy Pongal 2023: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு வழிபாடு நடத்தும் போது மண்ணில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதன்படி கிழங்கு வகைகள், காய்கறி வகைகள், கரும்பு உள்ளிட்டவைகள் வாங்குவதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் மக்கள் கூட்டம் இன்று அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சந்தைகளிலும் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி காய்கறிகளை வாங்கி வருகின்றனர். நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மகாராஜ நகர் மற்றும் என்ஜிஓ காலனி உழவர் சந்தைகளில் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 120 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் சுமார் ரூ. 60 லட்சம் வரை விற்பனையாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நேரடியாக விவசாயிகளிடம் இருந்து…
உழவர் சந்தைகளில் வியாபாரிகள் அல்லாமல் விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை வாங்கும் போது விலை குறைந்து நல்ல தரத்துடன் இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இதற்காக பாளையங்கோட்டையில் உள்ள உழவர் சந்தைகளில் 128 விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
சுமார் 50 ஆயிரம் நுகர்வோர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இன்றைய தினம் (ஜன. 14) மட்டும் 100 டன் காய்கறிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கூட்டம் அதிகம் வரும் நிலையை கருத்தில் கொண்டு இரவு வரை விற்பனையை அதிகரிக்க வியாபாரிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
விலை அதிகரித்து காணப்படும் காய்கறிகள்
கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முருங்கைக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அந்த காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் ஒரு கிலோ 140 முதல் 150 வரையும், வெண்டைக்காய் கிலோ 70 முதல் 80 வரையும், கத்திரிக்காய் ரூபாய் 100 முதல் 120 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.