ஒவ்வொரு வருடமும் தை மாதம் ஒன்றாம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றால், கிராம மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து அனைவருக்கும் பகிர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
அதுமட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை என்று அது ஒருபுறம் களைகட்டும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பேர் போன இடம் என்றால் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் தான். ஒவ்வொருவருடமும் இங்கு ஜல்லிக்கட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும்.
அந்தவகையில், இன்று பொங்கல் பண்டிகை என்பதால், ஜல்லிக்கட்டிற்கு முதல் களமாக அவனியாபுரம் தயாராகி உள்ளது. அங்கு, 320 மாடுபிடி வீரர்கள், ஆயிரம் காளைகள் என்று ஒரு திருவிழா கணக்காக கொண்டாடி வருகின்றனர்.
இந்தபோட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில் மற்றும் தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிக்கொண்டு வருகின்றன. காளைகளை அடக்குவதற்கு வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சேலத்தை சேர்ந்த 3வயது சிறுமி டோரா அவிழ்த்த காளையை அடக்க முடியாததால், 3 வயது சிறுமியின் காளை வெற்றிபெற்றது. இதில் வெற்றி முகத்துடன் இருக்கும் சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.