நேபாளம்: நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உள்பட 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது வருகின்றன.
Yeti விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் இந்தியர்கள். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விமானம் தீப்பற்றியதால் அந்த இடம் முழுக்க புகை மண்டலமானது. விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து பொக்காரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.