தமிழக – கேரள எல்லையில் உள்ள மூணாறு மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஆகிய இரண்டும் முக்கியமான சுற்றுலா தளங்களாக உள்ளன. இங்கு எப்போதும் இதமான குளிர் இருப்பதால் கோடைக்காலங்கள் மட்டுமல்லாது அனைத்து காலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாகக் கடந்த ஒரு வாரமாக மூணாறு மற்றும் கொடைக்கானலில் வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியல் வரை குறைந்து கடும் குளிர் உள்ளது. மேலும் பூங்காக்களிலும், பச்சைப் போர்வை போர்த்தியது போல் இருக்கும் தேயிலை செடிகளிலும் உறைபனி படர்ந்து வருகிறது. இதற்கிடையே பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விட்டுள்ளதால் குளிரை அனுபவிக்கவும் உறைபனியைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல், மூணாறு பகுதிகளில் குவியத் தொடங்கியுள்ளனர்.
கொடைக்கானலில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு உறைபனி ஏற்படும் அளவுக்கு பனிபெய்து வருகிறது. கொடைக்கானல் நட்சத்திர ஏரி, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் உறைபனியால் மூடப்பட்டது போலக் காட்சியளிக்கின்றன. மதியம் 12 மணி வரையிலும் கூட குளிர் அதிகமாக உள்ளது. அதேவேளையில் மாலை 4 மணிக்கு இருள் சூழத் தொடங்கிவிடுகிறது. வெப்ப நிலை 6 டிகிரி செல்சியஸூக்கும் குறைவாகவே இருக்கிறது. வெண்மையான போர்வை போர்த்திய காட்சிகள் ரம்மியாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது அதிகமாக வரத் தொடங்கியுள்ளனர்.

மறுபுறம் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும், கொடைக்கானலில் அதிகம் விளையக் கூடிய மலைப்பயிர்களின் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, வெள்ளைப்பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. மலர்ச் செடி பதியங்கள் போடப்பட்டிருந்தன. கடந்த ஒரு வாரமாகப் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மலர்ச் செடிகள் கருகிவிடாமல் இருக்க, கிரீன் மேட் போர்த்தப்பட்டுள்ளது.

மறுபுறம், மூணாற்றில் ஜனவரி 9-ம் தேதி முதல் காலையில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியது. மூணாற்றில் பாம்பாடும் சோலை தேசிய பூங்கா, தேவிகுளம், வட்டவடை, செண்டுவாரை உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் மூணாறு எஸ்டேட் மக்களின் அன்றாட பணிகள் முடங்கியுள்ள நிலையில், மறுபுறம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக மூணாறு கன்னிமலை எஸ்டேட் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர்.