துணிவு பிளஸ் வாரிசு… எம்.ஜி.ஆரை வச்சு கமலை ஏத்திய மக்கள் நீதி மய்யம்!

எம்.ஜி.ஆர்… தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பெயர். நடிகராக இருந்து முதலமைச்சராக உயர்ந்த முதல் நபர். திமுகவின் கொள்கைகளை தனது திரைப்படங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை எம்.ஜி.ஆரை சேரும். ஒருகட்டத்தில் கருணாநிதி உடன் ஏற்பட்ட மோதல் போக்கால் அதிமுகவை கையிலெடுத்தார். அதன்பிறகு நடந்தது எல்லாம் வரலாறு.

எம்.ஜி.ஆர் பிறந்த நாள்

பல்வேறு மகத்தான திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது 106வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு 106 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி அதகளம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் பிளவு

மறுபுறம் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். தனது வீட்டில் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. இதேபோல் டிடிவி தினகரன் ஒருபக்கம். இப்படி பல அணிகளாக அதிமுக பிரிந்து தொண்டர்களை குழப்ப மனநிலையிலேயே வைத்திருக்கிறது. எம்.ஜி.ஆரை போன்ற தலைவர்கள் இன்றும் தேவை என பல்வேறு தரப்பினரும் கூறி வரும் நிலையில், அவர் உருவாக்கிய கட்சி இப்படி ஒரு சிக்கலில் இருப்பதை யாராலும் ஜீரணிக்க முடியாது.

மநீம போஸ்டர்

ஒன்றுபட்ட கட்சியே எம்.ஜி.ஆருக்கு செலுத்தும் மரியாதை என்ற விஷயம் கடைக்கோடி தொண்டனின் மனதிலும் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. இந்நிலையில் எம்.ஜி.ஆரை மற்ற கட்சிகளும் கையிலெடுப்பது தான் ஹைலைட். குறிப்பாக நடிகர் கமல் ஹாசன் உருவாக்கி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோவையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அது மிகுந்த கவனம் ஈர்த்துள்ளது.

துணிவு, வாரிசு திரைப்படங்கள்

பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியான வாரிசு, துணிவு ஆகிய படங்களின் பெயர்களை போட்டு எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தி இறுதியில் கமல் ஹாசன் தான் அரசியல் எதிர்காலம் என்பது போல குறிப்பிட்டுள்ளனர். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க… என்ற டயலாக் தான் வந்து போகிறது. இந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் உடன் சிறுவயதில் கமல் நடித்த படத்தில் வரும் ஒரு காட்சியை பதிவிட்டுள்ளனர்.

அரசியல் வாரிசு கமல்

மேலும் எம்.ஜி.ஆர் கைகளால் கமல் ஹாசன் விருது வாங்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதில் எழுதப்பட்டுள்ள வசனம் இதுதான்.
”துணிவு அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல் ஹாசன்”
எனக் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை சிலர் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் உடன் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.