புதுடெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் அக்கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற பாஜகவின் 2 நாட்கள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நிறைவடைந்தது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கட்சியின் தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான தீர்மானத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை ஜெ.பி. நட்டாவின் தலைமையில் எதிர்கொள்ளும் நோக்கில் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது.
ஜெ.பி.நட்டாவின் தேர்வு குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”பாஜக தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கரோனா பெருந்தொற்றின்போது பாஜக சார்பில் பல்வேறு சேவைகளை அவர் முன்னெடுத்தார். அவரது தலைமையின் கீழ் கட்சி பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. வரும் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா ஆகியோரின் தலைமையில் கட்சி 2019 வெற்றியைக் காட்டிலும் மகத்தான வெற்றியைப் பெறும். நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராவார்” என தெரிவித்தார்.