Spot Visit: மு.க அழகிரியின் `மாட்டு பொங்கல்’ காமெடி… உதயநிதி `பெரியப்பா ஆசி’ – கலகலத்த மதுரை திமுக

அரசியல் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்ததன் மூலம், அழகிரி மீண்டும் அரசியலில் என்ட்ரி ஆகிறார் என்ற பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தமிட்டு ஆசீர்வதிக்கும் காந்தி அழகிரி

முரசொலி நாளிதழ் நிர்வாகத்தை கவனிக்க 1980-களில் மதுரைக்கு வந்த மு.க.அழகிரி, 90 களில் கட்சிக்குள் அதிகாரம் செலுத்த தொடங்கி, தனக்கென்று ஒரு ஆதரவாளர் கூட்டத்தை மதுரை மட்டுமின்றி தென்மண்டலத்தில் உருவாக்கினார். அதன் பின்னரே கட்சிக்குள் அழகிரி அணி, ஸ்டாலின் அணி என கட்சியினர் செயல்படத் தொடங்கினர். பின்பு தென்மண்டல அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

தென் மாவட்டங்களில் தன் ஆதரவாளர்களையே கட்சி பொறுப்பிலும், எம்.எல்.ஏ, எம்.பி, மேயர் என பதவிகளிலும் அழகிரி கொண்டு வந்தார். அதேநேரம் ஆதரவாளர்களில் ஒருசிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதும் கட்சிக்குள் சர்ச்சை ஏற்படுத்தி மக்கள்மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பெரியப்பாவுடன் மகிழ்ச்சியில் உதயநிதி

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மதுரை எம்.பியாக வெற்றி பெற்ற அழகிரி, மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்று தன் அணியை வளப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் கருத்து வேற்பாடு அதிகமாகி வந்த நிலையில், மதுரையில் தன் ஆதரவாளர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கவில்லை என்று சில வருடங்களுக்கு முன் கட்சித் தலைவரான கலைஞர் கருணாநிதியிடமே வாதம் செய்ததாக சொல்லப்பட்ட நிலையில் அழகிரியும் அவர் ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அதன்பின்பு எவ்வளவு முயற்சி எடுத்தும் தி.மு.கவில் சேர்க்க மறுத்துவிட்டனர். இதனால் தி.மு.கவையும், மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து பேச ஆரம்பித்தார். கருணாநிதி மறைவுக்குப்பின் தனியாக அமைதிப் பேரணியை சென்னையில் நடத்தியவர், கட்சியில் மீண்டும் இணைய உள்ளதாகவும் இல்லாத பட்சத்தில் தனி இயக்கம் ஆரம்பிக்கப் போவதாகவும் பரபரப்பாக அறிவித்தவர், தன் ஆதரவாளர்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டங்களை மதுரையில் நடத்தினர்.

முத்தமிட்டு ஆசீர்வதிக்கும் காந்தி அழகிரி

அதன்பின்பு எந்த நடவடிக்கையும் இல்லாமல் அமைதியாகிவிட்டார். சமீப வருடங்களில் நடந்த சில தேர்தலின்போதும் ‘தி.மு.க தோற்க்கும், ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பே இல்லை’ என்று பேசி வந்தார்.

இந்த நிலையில்தான் மதுரை வந்த உதயநிதி – மு.க அழகிரி சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரவேற்க காத்திருந்த அழகிரி

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வரும் நிலையில், அமைச்சரான பின்பு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வந்த உதயநிதி ஸ்டாலின், அழகிரியை சந்திக்க வருகிறார் என்ற தகவல் நேற்று இரவு 8 மணிக்கு பரவ ஆரம்பித்தது. இத்தகவல் உறுதியானதா எனறு தெரியாத நிலையில் செய்தியாளர்கள் மதுரையிலுள்ள அழகிரி வீட்டு முன் குழும ஆரம்பித்தனர். அவர் ஆதரவாளர்களும் வர ஆரம்பிக்க நீண்ட காலத்துக்கு பின் அந்த இடம் பரபரப்பானது.

அப்போது வீட்டுக்கு எதிரே உள்ள அலுவலகத்திலிருந்து வெளியில் வந்த அழகிரி செய்தியாளர்களை பார்த்து ‘என்ன விஷயம்?’ என்று சிரித்தபடி கேட்க, ‘உங்களை பார்க்க உதயநிதி வருவதாக சொல்லப்படுகிறதே…’ என்று சொன்னவுடன் “பெரியப்பாவான என்னை பார்க்க தம்பி பையன் வருகிறார்” என்று செய்தியாளர்களை பார்த்து மகிழ்ச்சியாக கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவரிடம் ‘பொங்கல் வாழ்த்துக்கள்’ என்று செய்தியாளர்கள் குழுவாக சொல்ல, ‘இன்று மாட்டுப்பொங்கல்’ என்று சொல்லி காமெடி செய்தார்.

அழகிரி-உதயநிதி

நீண்ட காலத்துக்குப்பின் அழகிரி வீட்டுக்குள் செய்தியாளர்களை உள்ளே வரச்சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் வந்த உதயநிதியை வாசலில் நின்று வரவேற்ற அழகிரி, ஆரத்தழுவி துண்டு போர்த்தினார். அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, உதயநிதியை உச்சிமுகர்ந்து முத்தமிட்டு வாழ்த்தினார். இருவரின் காலைத் தொட்டு வணங்கினார் உதயநிதி.

பின்பு வீட்டுக்குள் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள், பின்னர் வெளியில் வந்தனர். அப்போது பேசிய உதயநிதி, “அமைச்சரானபின் பெரியப்பாவிடம் ஆசி பெற வந்தேன்.” என்றார்.

மு.க அழகிரி பேசும்போது, “உதயநிதியும் என் பிள்ளைதான். என் பிள்ளைகளுடன் விளையாடிய உதயநிதி இன்று அமைச்சராகி வந்துள்ளார். இதைவிட மகிழ்ச்சி என்ன வேண்டும்” என்றவரிடம், “நீங்கள் இனி கட்சியில் சேர்ந்து பனியாற்றுவீர்களா?” என்றதற்கு, “நான் திமுகவில் மீண்டும் செயல்படுவது குறித்து அவர்கள்தான் சொல்ல வேண்டும்” என்று உதயநிதியைக் காட்டி பேசினார்.

அதோடு உதயநிதி கிளம்பிச்சென்றார். நீண்ட நாட்களுக்குபின் ரொம்பவும் மகிழ்வுடன் இருந்த அழகிரி, அங்கு நின்றுகொண்டிருந்த செய்தியாளர்களை பார்த்து “சபை கலையலாம்.” என்று சொல்ல, மீண்டும், “பொங்கல் வாழ்த்துகளை” செய்தியாளர்கள் சொல்ல “ஜல்லிக்கட்டு வாழ்த்துகள்” என்று சிரித்தபடி கூறிவிட்டு உள்ளே சென்றார்.

பெரியப்பாவுடன் மகிழ்ச்சியில் உதயநிதி

அவருடைய ஆதரவாளர்களிடம் பேசியபோது, “வருகின்ற காலம் எங்களுக்கு மகிழ்ச்சியானது. 10 வருடங்களுக்கு பின் நல்ல சம்பவம் நடந்துள்ளது. மீண்டும் அண்ணன் தி.மு.கவில் இணைந்து செயல்பட உள்ளார்” என்றனர்.

இந்த சம்பவத்தால், ஆரம்பத்தில் அழகிரி ஆதரவாளர்களாக இருந்து ஸ்டாலின் அணி பக்கம் சென்று இன்று அமைச்சராகவும், எம்.எல்.ஏக்களாவும், மாவட்ட செயலாளராகவும் இருக்கும் கட்சி நிர்வாகிகள் ஆடிப்போயுள்ளனராம்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.