உலகின் வயதான நபர் லூசில் ராண்டன் 118வது வயதில் மரணம்: இரு பெருந்தொற்றுகளில் உயிர் பிழைத்தவர்

பாரிஸ்: உலகின் வயதான நபராக அறியப்பட்டுவந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 118. அவரது மறைவை அவருடைய செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

லூசில் ராண்டன், டோலுன் நகரில் அவர் தங்கியிருந்த இறுதி நாட்கள் சிகிச்சை மையத்தில் தூக்கத்திலேயே உயிரிழந்ததாக செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெலா தெரிவித்தார்.

இது குறித்து செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெலா, “லூசில் ராண்டனின் மறைவு நிச்சயமாக பெருந்துயர் தான். ஆனால் அவர் இயற்கை எய்தவே விரும்பினார். மரணத்தின் மூலம் தனது சகோதரருடன் சேர வேண்டும் என்று விரும்பினார். லூசிலுக்கு நிச்சயமாக இது விடுதலை தான்” என்றார்.

லூசில் ராண்டான் 1904 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் பிறந்தார். பின்னாளில் கன்னியாஸ்திரியான அவரை அனைவரும் சிஸ்டர் ஆண்ட்ரே என்று அழைத்து வந்தனர். லூசில் பிறந்த ஆண்டில் தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதல் சப் வே திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தன் வாழ்நாளில் லூசில் இரண்டு உலகப் போர்களை சந்தித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் உலகப்போரின்போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டார். அவற்றை எல்லாம் சமாளித்து உயிர் தப்பினார். 1944-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது கன்னியாஸ்திரியானார்.

இரு உலகப் போர் மட்டுமல்ல இரு பெருந்தொற்றுக்களையும் சந்தித்தவர் லூசில், 1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானார். அதில் இருந்து மீண்டு தனது ஆயுளை காப்பாற்றிக்கொண்டார். கரோனாவையும் சமாளித்தார். கரோனாவில் உயிர் பிழைத்த உலகின் வயதான பெண்மணி என்ற சாதனையையும் படைத்தார். இந்நிலையில் அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது.

லூசில் மறைவுக்கு பிரான்ஸ் மக்கள் தங்கள் இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.