மாமியார் வீட்டில் இருந்து நைசாக பேசி அழைத்து வந்து கொடூரம்; இரும்பு கம்பியால் அடித்து மனைவி கொலை: சடலத்தை வீட்டில் பூட்டி விட்டு போலீசில் சரணடைந்த கணவன்

ஸ்ரீகாளஹஸ்தி: நடத்தை சந்தேகத்தால் மாமியார் வீட்டில் இருந்த மனைவியை நைசாக பேசி அழைத்து வந்து இரும்பு கம்பியால் அடித்து கொன்று சடலத்தை வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு கணவர் போலீசில் சரணடைந்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த சூளூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா (30), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (25). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

கிருத்திகா என்ற மகளும் விக்னேஷ்வர் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் என்டிஆர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் செங்கையாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனவேதனை அடைந்த உமாமகேஸ்வரி சில நாட்களுக்கு முன், தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவி ட்டார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்தனர்.

இதையடுத்து மாமியார் வீட்டுக்கு சென்ற செங்கையா, சங்கராந்தி (பொங்கல்) பண்டிகைக்காக தனது மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறும், தனது சொந்த ஊருக்கு செல்வதாகவும் மாமனார், மாமியாரிடம் கேட்டுள்ளார். அதன்படி உமாமகேஸ்வரியை அவருடன் அனுப்பி வைத்தனர். குழந்தைகளை உமாமகேஸ்வரியின் வீட்டிலேயே தங்கினர். தம்பதியினர் நேற்று முன்தினம் இரவு என்டிஆர் நகரில் உள்ள வீட்டுக்கு வந்தனர். மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வெளியே சென்று நள்ளிரவு வந்த செங்கையா, மனைவியுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியது.

ஆத்திரமடைந்த செங்கையா இரும்பு கம்பியால் உமாமகேஸ்வரியின் தலையில் சரமாரி தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த உமாமகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்ற செங்கையா, உமாமகேஸ்வரியின் சகோதரர் வெங்கடேஷூக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உமாமகேஸ்வரியை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் ஸ்ரீகாளஹஸ்தி நகர காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.