தொகுதிக்கு ஓர் அரசு கல்லூரி… உயர்கல்வியை எளிதாக்கும் 'திராவிடமாடல்' திட்டம்

தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்புகள் எந்த அளவிற்கு வலுவானதோ அந்த அளவிற்கு கல்விசார் கட்டமைப்புகளும் வலுவானதாக விளங்குகின்றன. தொடக்கப் பள்ளி முதல் முனைவர் பட்டத்திற்கான கட்டமைப்புகள் வரை ஆண்டாண்டுகளாக கல்விசார் கட்டமைப்புகள் தொடர் வளர்ச்சியடைந்துள்ளன. 

அரசுபள்ளிகள் அதிகரிப்பு, அரசு பள்ளி மாணவர்கள் நலன் சார்ந்த மதிய உணவு திட்டம், இலவச சைக்கிள், இலவச லேப்டாப், இலவச சீருடை, இலவச பஸ்பாஸ், ஆகியவை மாணவர்களை கல்வி கற்றலில் நீடிக்கச் செய்கிறது. மாணவர்கள் கற்றலை எளிமையாக்க தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட சமச்சீர் பாடத்திட்டம் பள்ளியில் தேர்ச்சி பெறுவோரின் விகிதத்தை அதிகபடுத்தியது என ஆய்வுகள் கூறுகின்றன. 

தேசிய விழுக்காட்டைவிட தமிழ்நாடு உயர்வு

கற்றல் எளிமையாகும்போது, தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது இயல்புதான். அதேபோல், பத்தாம் வகுப்பு முடித்தால் அடுத்து உயர்நிலை பள்ளிக்கும், 12ஆம் வகுப்பு முடித்தால் கல்லூரிக்கும் மாணவர்கள் செல்லும் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதாவது, பள்ளி முடித்து உயர்கல்வி பயில வரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 27.1 விழுக்காடாகஉள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 51.4 விழுக்காட்டினர் பள்ளி முடித்து உயர்கல்வி நோக்கி செல்கின்றனர். 

இந்த புள்ளி விவரமே தமிழ்நாட்டின் கல்விசார் கட்டமைப்பு எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு. தொழில்துறைசார் கட்டமைப்பு, மருத்துவ கட்டமைப்பு ஆகியவைபோல் தமிழ்நாட்டில் கல்விகட்டமைப்பிற்கு என்று தனி வரலாறுஉள்ளது. அதில், தற்போதைய திமுக அரசும் பல திட்டங்களை வகுத்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் குறைபாட்டை போக்க கொண்டு வரப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்து அறநிலையத்துறை சார்பில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில், தற்போது திமுக அரசு தமிழ்நாட்டின் கல்விசார் கட்டமைப்பில் பெரும் புரட்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஓர் அரசு கலை, அறிவியல் கல்லூரியை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுபோன்று தொகுதிக்கு ஓர் அரசு கல்லூரி அமையும்போது, இடை நிற்றல் விகிதம், கற்றலில் ஏற்படும் சிரமம் ஆகியவை பெருமளவில் குறையும். மேலும், சுயநிதி கல்லூரிகளைவிட அரசு கல்லூரியில் பயிலவே மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி,  திராவிட மாடலின் அடிப்படை கூறுகளில் ஒன்றான அனைத்து தரப்பினருக்குமான கல்வி என்பது இதனால் பரவலாகும் வாய்ப்பு அதிகமாகும். 

இனி உலகநாடுகளுடன் போட்டி

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஆகியவை பெண் கல்வியில் ஏற்கெனவே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இந்த தொகுதிக்கு ஓர் அரசுகல்லூரியும், அதிக அளவில் பெண்களை உயர் கல்வியில் தேர்ச்சிபெற ஊக்கமளிக்கும் எனவும் கருதப்படுகிறது. முதற்கட்டமாக, தொகுதிக்கு ஓர் அரசு கல்லூரி திட்டத்தில், கல்லூரிகளிலே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். மேலும், இதற்கென கல்லூரிகள் இல்லாத தொகுதிகள் குறித்தும், அந்த தொகுதிகளில் நிதி நிலைக்கேற்ப ஆய்வு செய்து அரசு கலைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து இதுவரை 31 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் வரிசையில், தொகுதிக்கு ஓர் அரசு கல்லூரி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் உயர் கல்வி சேர்க்கை இந்தியாவைதாண்டி, பல்வேறு உயரிய உலக நாடுகளுடன் போட்டியிடும் என கணிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.