புதுடெல்லி: மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த இடதுசாரி தலைவர் பிருந்தா காரத்திடம், போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும், மேடையை விட்டு இறங்குமாறும் மல்யுத்த வீரர்கள் கைகூப்பி கோரிக்கை விடுத்தனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கும், சில பயிற்சியாளர்களும் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மல்யுத்த கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “இந்த விவகாரம் விளையாட்டு வீரர்களின் நலன் சார்ந்தது என்பதால், அமைச்சகம் இதனை தீவிரமான ஒன்றாக பார்க்கிறது. இந்த விவாகாரம் தொடர்பாக 72 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். தவறினால், தேசிய விளையாட்டுத்துறை விதி 2011ன் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த மல்யுத்த வீரர்கள், ”தயவு செய்து இதனை அரசியலாக்காதீர்கள். நீங்கள் பேசுவதற்கு மைக் தர முடியாது. தயவு செய்து நீங்கள் சென்றுவிடுங்கள்” என மல்யுத்த வீரர்கள் கைகூப்பி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பிருந்தா காரத் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.