புதுச்சேரி: மத்திய அரசிடம் கோரி நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாநில அந்தஸ்து, சட்டப் பள்ளிக்கு நிதி, உயர் நீதிமன்றக் கிளை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மனு தந்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பல முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கூட்டணி அரசின் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்த தொடங்கியுள்ளார். இச்சூழலில் புதுச்சேரிக்கு இன்று வந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அளித்த மனு விவரம்:
புதுச்சேரி அரசு தரப்பில் அளித்து நீண்டகாலமாக சில கோரிக்கைகள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை. இது மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர விரைந்து பரிசீலிக்க வேண்டும். கோவா உள்ளிட்ட பல யூனியன் பிரதேசங்கள் மாநில அந்தஸ்தை பெற்றுள்ள சூழலில் புதுச்சேரி மட்டும் மாநிலமாகாமல் இன்னும் யூனியன் பிரதேசமாகவே உள்ளது.
புதுச்சேரியில் சட்டப் பள்ளி தொடங்க தேவையான நிதியை ஒதுக்க மத்திய உள்துறை மற்றும் மனித வளமேம்பாட்டு அமைச்சகத்துக்கு சட்ட அமைச்சர் பரிந்துரைக்க வேண்டும். புதுச்சேரியில் உயர் நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். புதுச்சேரி மக்களுக்காக நீண்டநாள் நிலுவையிலுள்ள இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.