சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வேகமாக 1,000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுப்மான் கில்லின் இரட்டை சதத்தால் இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய இளம் துடுப்பாட்ட வீரர் சுப்மான் கில் 109 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 1000 ஓட்டங்களை கடந்தார். அவர் தனது 19 ஆவது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன் மூலம் 1000 ஓட்டங்களை அதிவேகமாக தொட்ட இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானின் பஹர் ஜமான் தனது 18 ஆவது இன்னிங்சில் 1000 ஓட்டங்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.
இந்த சாதனை வரிசையில் 2 ஆவது இடத்தை பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக்குடன் சுப்மான் கில் பகிர்ந்துள்ளார். இந்திய அளவில் ஷிகர் தவான், விராட் கோலி தங்களது 24 ஆவது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.