இது ஆன்மிக புரட்சிக்கு வித்திடும் ஆட்சி… அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

கோவை பேரூர் பட்டீஸ்வர் திருக்கோவிலில் சிவராத்திரி விழாவின் முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அவர்களிடம் கூறியது:

வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், பக்தர்களுக்கான இடம், மருத்துவ வசதி,குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யவும் முருகக்கடவுளுக்காக ஓம குண்டங்களையும் ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்தார்.

கோவை பட்டீஸ்வரர் கோவிலில் மூன்றரை கோடி மதிப்பில் கோவிலுக்கான திருக்கோவில் பணிகள் நடைபெற உள்ளதாக கூறினார். வரலாற்று சிறப்புமிக்க பிரதான கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் 2022-23 நிதி ஆண்டில் 100 கோடி ரூபாய் முதல்வரால் இத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் 104 கோவில்கள் இத்திருப்பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

தமிழக முதல்வரும் இந்து சமய அறநிலைய துறைக்கு கேட்டதை கொடுத்து வருகிறார் என கூறிய அவர், ஆன்மீகவாதிகளுக்கு சிறப்புமிக்க காலமாக இது அமைந்துள்ளது என தெரிவித்தார். கோவிலின் அருகில் குப்பைகள் எங்கு கொட்டப்பட்டாலும் அதனை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் அதனை அகற்றுகின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.

பேரூர் தேர் நிலை திடலை சீர் செய்வதற்கான ஒப்பம் கோரப்பட்டுள்ளது எனவும், கூடிய விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தேர் சுற்றி வரும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி தேர் சுற்றி வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். பேரூரில் தர்ப்பணம் கொடுக்கின்ற பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் 80 சதவிகிதம் முடிவுற்றுள்ளது எனவும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுகிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மருதமலை கோவிலில் சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள பொருட்கள் தூக்கி வீசப்பட்டது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “விழாவிற்காக பயன்படுத்தப்பட்ட துணிகள் தான் வீசப்பட்டன அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அதேசமயம் இந்த வீடியோ வந்தவுடன் இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது என்றார்.

மேலும் கோவில் புதுப்பிப்பு பணிகளில் பழமை மாறாமல் இருப்பதற்காக பிரத்யேக கலைஞர்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தொன்மையான பொருட்களை பொக்கிஷமாக இந்த ஆட்சி பாதுகாக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கோவிலில் சிவராத்திரி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஐந்து கோவில்களில் நடைபெறுகிறது. அதில் கோவையில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலிலும் நடைபெறுகிறது. ஐந்து கோவில்களிலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.

மேலும் அங்கு பல்வேறு கோவிலில் இருந்து பிரசாதங்கள் வரவழைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரப்படும். ஸ்டால்கள் அமைத்து பல்வேறு ஆன்மீக புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும், பல்வேறு இசைக்கருவிகளும் வரவழைக்கப்பட்டு அன்றைய தினம் நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கோவையில் 3 ஏக்கர் பரப்பளவில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது என கூறிய அவர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதற்கான வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்து தரப்படும் என்றார்.

எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் இந்த ஆட்சியில் 407 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. சுமார் 2000-க்கும் மேற்பட்ட கோவில்களில் ஒரு லட்சம் ரூபாயாக இருந்த நிதி உதவி இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவைகளை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள் திராவிட கழகத்தின் மீது பல்வேறு அவதூறுகளை சொல்லி வருகிறார்கள்.

அதனைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை எங்களுடைய பணி மக்களை சார்ந்தது. இந்த ஆட்சி ஆன்மீக புரட்சிக்கு வித்திடுகின்ற ஆட்சி; ஆன்மீகப் புரட்சி ஏற்படுகின்ற ஆட்சி. இதுபோன்ற திருப்பணி எந்த ஆட்சியிலும் நடைபெறவில்லை இனி வருகின்ற காலத்தில் இதனை விஞ்ச வேண்டும் என்றால் அதுவும் நம் முதலமைச்சரால் தான் முடியும் என்றார் அமைச்சர் சேகர்பாபு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.