பாஜகவில் சேருங்கள் இல்லையென்றால் புல்டோசர் தான் – ம.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் அரசியல் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா இஸ்லாமியர்கள் போற்றும் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறிய விவகாரம் உ.பி.யில் கலவரமாக வெடித்தது. 200 க்கும் மேற்பட்டோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பிரயாக்ராஜ் மாவட்ட கலவரத்துக்கு காரணமானவர் எனக்கூறி அகமது என்பவரது வீடு புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டது. அத்துடன், இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறி வைக்கப்பட்டு புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டன.

இதனால், இந்துக்களுக்கு எதிரான பிரச்சினைகளை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் கொண்டு தீர்த்து வருவதாக அவர் மீது விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில், பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா காங்கிரஸ் காரர்களுக்கு புல்டோசர் மிரட்டல் விடுத்து பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா கடந்த புதன்கிழமை ருதியாய் நகரில் நடந்த ரகோகர் நகர் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், காங்கிரஸ் உறுப்பினர்களே கேளுங்கள்; பாஜகவில் சேருங்கள். மெதுவாக ஆளுங்கட்சி பக்கம் நகருங்கள். 2023-ல் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும்போது மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். புல்டோசர் தயாராக உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குணா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிசங்கர் விஜயவர்கியா, அமைச்சரின் இந்த கருத்து பாஜகவின் இமேஜை கெடுத்து விட்டது என்றார். மேலும், அவர் தனது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ரகோகர் மக்கள் அவருக்கு ஜனவரி 20 ஆம் தேதி தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று அவர் கூறினார்.

வட மாநிலங்களில் சில பாஜக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்காரர்களை மிரட்டுவதும், சிறுபான்மையினர்களை தாக்கி பேசுவதும் வழக்கமாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.