பாலியல் குற்றவாளிக்கு பரோல்..அது அவரது உரிமை..ஹரியானா முதல்வர் கருத்து.!

கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு குற்றவாளி, சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த ராம் ரஹீம் சிங், கொலை மற்றும் பாலியல் தண்டனை பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக பாஜகவிற்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் ரஞ்சித் ரஞ்சித் சிங் என்பவர் டேரா சச்சா நிறுவனரான குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தீவிர பக்தராக இருந்தவர். அவர் இந்த அமைப்பின் நிர்வாக பொறுப்பிலும் இருந்தார். சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்திற்கு வரும் பெண்களை எவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார் என்ற விவரங்களை தெரிவிக்கும், அநாமதேயக் கடிதம் ஒன்று அவரது ஆதரவாளர்களிடையே சுற்றி வந்தது.

இந்த கடிதத்தை எழுதியவர் ரஞ்சித் சிங் தான் என்று சந்தேகித்த குர்மீத் ராம் ரஹீம் சிங், அதன் பின்னர் அவரை கொலை செய்தார் என்று சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் சிங்கின் கொலைக்குப் பின் ராம் ரஹீம் சிங் மற்றும் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார்.

அதனால் ராம் ரஹீம் சிங் மற்றும் பிற நான்கு பேர் மீது மட்டுமே வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் இவர்கள் ஐவருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. 1999 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், குர்மீத் ராம் ரஹீம் சிங் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக 2002-ஆம் ஆண்டில் புகார் எழுந்தது.

இந்த வழக்கு பஞ்சாப் – ஹரியானா மாநில உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கின் குற்றப்பத்திரிகை அம்பாலா நீதிமன்றத்தில் 2007-ஆம் ஆண்டில் சிபிஐ தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து 2008-ஆம் ஆண்டில் குர்மீத் சிங் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் குர்மீத் சிங் மீது புகார் தெரிவித்த இரு பெண்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.

பாலியல் வல்லுறவு வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று 2017 ஆகஸ்டில் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன் அவரது ஆதரவாளர்கள் பஞ்ச்குலா, டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகம் உள்ள சிர்ஸா உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வன்முறையை ஒடுக்க காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூடு, தடியடி உள்ளிட்ட சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர். பாலியல் வல்லுறவு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் ராம் ரஹீம் சிங்.

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தால் கொதிக்கும் டெல்லி.!

இந்தநிலையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றாலும் அவ்வப்போது அவர் பரோலில் வெளிவருவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் மீண்டும் அவருக்கு 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தீவிர பாஜக ஆதரவாளரான ராம் ரஹிம் சிங்கிற்கு பரோல் கிடைத்தது குறித்து ஹரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறும்போது, ‘‘ராம் ரஹீமுக்கு பரோல் கிடைத்தது என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவருக்கு பரோல் கிடைத்தால், அது அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றிய பின்னரே இருக்க வேண்டும், அது அவருடைய உரிமை. அதில் நான் தலையிட மாட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.