நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பனி பரவல் அதிகரிப்பு காரணமாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இவ்வாண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மழைக்காலமாக கருதப்படும் நவம்பர் மாதம் முதலே இவ்வாண்டு பனியின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. ஜனவரி பிறந்த நிலையிலும் இன்னமும் அதிக பனிபொழிவை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இரவு 8 மணிக்கே குளிர்காற்றும், அதிகாலை நேரங்களில் நல்ல பனியும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சளி, காய்ச்சலுக்கு உள்ளாவதோடு, தொண்டை புகைச்சல் நோய்க்கும் உள்ளாகி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
சில தனியார் மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் ேடாக்கன்கள் போட்டுவிட்டு பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் அமர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1200 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தாலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளின் உறவினர்களும் அவர்களோடு வருவதால் காலை நேரங்களில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இம்மருத்துவமனையில் சமீபகாலமாக பனி காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பை காரணம் காட்டியே தினமும் நூறுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் உள்நோயாளியாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் திணறுவதாக புகார்கள் எழ தொடங்கியுள்ளன. நோயாளிகள் படுக்கைகள் இன்றி, ஒரே படுக்கையில் 2 பேர் அமர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் படங்கள் வர தொடங்கியுள்ளன. இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால், வைரஸ் காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை. காய்ச்சல் பாதிப்பால் வருவோருக்கு 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு செயல்பட்டு வருகிறது. மேலும் 30 படுக்கைகள் கொண்ட ‘ஸ்டெப் டவுன்’ வார்டு என்ற சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களை காய்ச்சல் வார்டில் 2 நாள் வைத்து சிகிச்சை அளிக்கிறோம்.
பின்னர் அவர்கள் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவர்கள் வீட்டிற்கு செல்லலாம். இவ்வார்டில் தற்போது 15 பேர் மட்டுமே காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு உள்ளது. மற்றவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் மட்டுமே உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் ஒரே படுக்கையில் 2, 3 பேருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறுவது வெறும் வதந்தி அதில் உண்மையில்லை. ஒருவேளை காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள் அந்த படுக்கையில் படுத்திருந்திருக்கலாம். காய்ச்சல் பாதிப்பு அதிகமானால் கூட, அனைவருக்கும் சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.’’ என்றார்.