தமிழர் பேரவை சார்பில் பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். பிரிட்டன் தமிழர் பேரவை, ஹரோ மாநகரப் பேரவையுடன் இணைந்து 2011-ம் ஆண்டு தைப் பொங்கல் விழாவை நடத்தியதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் தைப் பொங்கல் விழா நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பிரிட்டன் தமிழர் பேரவை சார்பில் பிரிட்டன் நாடாளுமன்ற உள்ளரங்கத்தில் ஜனவரி 17-ம் தேதி தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தெரஸா வில்லியர்ஸ், சர் ஸ்டீபன் திம்ஸ், ஸ்டீவ் பேக்கர், யாஸ்மின் குரேஷி, பென் எலியட் உட்பட மூன்று கட்சிகளைச் சேர்ந்த 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்று பிரிட்டன் தமிழர் பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பிரிட்டன் தமிழர் பேரவை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

`இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு ஊழலும், பாதுகாப்புக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதும், இலங்கை அரசின் கொடூரமான நடத்தையும்தான் காரணங்களாகும். இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளை இனப்படுகொலை என்றே குறிப்பிட முடியும். இலங்கையில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்படவேண்டும்’ என்று நிகழ்ச்சியில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்” என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், “தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு முற்படுகிறது. பேச்சுவார்த்தை வெற்றிபெறுவதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா பிரதிநிதித்துவத்தைக் கொண்ட சர்வதேச நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு மனித உரிமைகள், நீதியை வழங்குவதற்கு இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தங்களை உறுதிசெய்ய வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு எதிரான தடைகளை நிறைவேற்றிய கனடா அரசுக்கு பாராட்டுகள்.
பிரிட்டன் உள்ளிட்ட மற்ற நாடுகளும் அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று நிகழ்ச்சியில் பேசியவர்கள் குறிப்பட்டனர்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதற்கு முன் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு விழாவில் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் என்று பிரிட்டன் தமிழர் பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.