
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15ஆவது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிஷா தலைநகர் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த அணிகள் நேரடியாக கால் இறுதிக்குள் நுழைந்தன.
அந்த வகையில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3ஆவது இடத்தை பிடித்த அணிகள் 2ஆவது சுற்றில் மோதுகின்றன.
அதன்படி ‘டி’ பிரிவில் 2ஆவது இடத்தை பிடித்த இந்தியா, ‘சி’ பிரிவில் 3ஆவது இடத்தை பெற்ற நியூசிலாந்துடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 3-3 கோல்கள் அடுத்து சம நிலையில் இருந்தன.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இரு அணிகளுக்கு தலா 5 வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. இதில் 5-4 என நியூசிலாந்து அணி வெற்றி பெற்று காலிறுதி முன்னேறியது.
இதனால் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
newstm.in