சிவான், பீஹாரில், கள்ளச்சாராயம் குடித்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; ஏழு பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் — ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, 2016 ஏப்ரல் முதல், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில், ஷரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிவான் மாவட்டத்தின் போபாட்பூர் கிராமத்தில், நேற்று கள்ளச்சாராயம் குடித்த 10 பேர், வயிற்று வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து, அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூவர் இறந்தனர்; ஏழு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement