ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு: உயர் நீதிமன்றத்தில் மனு!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்த 50000 பேர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு அனுமதி கோரிய வழக்கை, தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வழக்கில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து, வழக்கை தள்ளி வைத்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத் தலைவர் தியாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 2018 ஆம் ஆண்டு மூடப்பட்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் ஏராளமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெரு நிறுவன சமூக பொறுப்பின்படி, ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூலமாக கிடைக்கப்பெறும் நிதியினை கொண்டு பயன்பெற்று வந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு, விவசாயிகள் மற்றும் மருத்துவ சேவைகள் இது போன்றவைகள் மூலம் பல்வேறு வகையில் பலதரப்பட்ட மக்கள் பயன் பெற்று வந்த நிலையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் மீது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற முறையில் சிலர் குற்றச்சாட்டுகளை கூறி பொதுமக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீது ஒருவித தீய எண்ணத்தை ஏற்படுத்தி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தொழிற்சாலையை திறக்க கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆகவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை பற்றி அறிவியல் பூர்வமான உண்மையினை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் 50000 பேர் கலந்துகொள்ளும் மாபெரும் விளக்க கருத்தரங்கம் நடத்த அனுமதி கோரி தூத்துக்குடி சிப்காட் காவல் துறையினரிடம் மனு அளித்தோம் ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.

எனவே, 50000 பேர் கலந்து கொள்ளும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு சிப்காட் காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததை ரத்து செய்து கருத்தரங்கிற்கு அனுமதி வழங்க வேண்டும்.” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வழக்கில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.