சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் அடர்ந்த பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் கடம்பூர் மலைப்பகுதி உகினியம் வன கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது. இதை பார்த்து பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஹெலிகாப்டரில் இருந்து 4 பேர் கீழே இறங்கினர்.
விசாரித்தபோது அவர்கள் வாழும் கலை யோகா நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் என்பது தெரியவந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கயம் மற்றும் திருவனந்தபுரம் செல்வதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளனர். கடம்பூர் மலைப்பகுதியில் வந்தபோது கடுமையான பனிமூட்டம் காரணமாக வழி தெரியாமல் சாதுரியமாக ஹெலிகாப்டரை, பைலட் தரை இறக்கியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ஒரு மணி நேரம் கழித்து பனிமூட்டம் விலகியதும் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. மலை கிராம மக்கள் ஹெலிகாப்டரை ஆச்சரியத்துடன் பார்த்ததோடு செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.