சேலம் அருகே பரிதாபம்.! ரூ.40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் கணவன்-மனைவி தற்கொலை.!

சேலம் மாவட்டத்தில் ரூபாய் 40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவரது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ராஜேந்திரன் மற்றும் சாந்தி தனித்தனி கட்டலில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அழகாபுரம் போலீசார், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ராஜேந்திரன் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடந்த 2015 ஆம் ஆண்டு 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து வங்கியில் கடனை அடைப்பதற்காக நோட்டீஸ் வந்ததால், இந்த கடனை வடியுடன் அடைப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த நடேசன் என்பவர் மூலம் உலகநாதன் (47) என்பவரிடம் ரூபாய் 19 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் உலகநாதனிடம் வாங்கிய கடன் கந்துவட்டி சேர்த்து தற்போது 40 லட்சம் கடன் கொடுக்க வேண்டும் என்று கடன் கொடுத்தவர்கள் ராஜேந்திரனை மிரட்டி, தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் வாழ்க்கையில் வெறுப்படைந்து மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் கந்துவட்டி கேட்டு ராஜேந்திரனை மிரட்டிய உலகநாதன் மற்றும் நடேசன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.