சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள பதான் படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஷாருக்கான் தவிர பதான் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பதான் படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. மேலும் படத்திலிருந்து வெளியான ஒரு பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. பிறகு படக்குழு இந்த காட்சிகளை நீக்குவதாக சம்மதம் தெரிவித்தது.
பாகிஸ்தான் இந்தியாவில் கொரோனாவை விட அதி பயங்கரமான ஒரு வைரஸை செலுத்த நினைக்கிறது, இதனை இந்திய இராணுவத்தின் உளவாளியாக இருக்கும் ஷாருக்கான் எப்படி தடுக்கிறார் என்பதே பதான் படத்தின் ஒன்லைன். 57 வயதில் 25 வயது இளைஞன் போல் உள்ளார் ஷாருக்கான். ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளிலும் தனது உயிரை கொடுத்து நடித்துள்ளார். வழக்கம்போல நடிப்பிலும் காமெடியிலும் அசத்தியுள்ளார், மறுபுறம் தீபிகா படுகோனே ஷாருக்கானுக்கு இணையாக நடிப்பிலும், சண்டை காட்சிகளிலும் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
ஜான் ஆப்ரகாம் ஒரு கொடூரமான வில்லனாக கலக்கியுள்ளார். ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக இவரே படத்தை காப்பாற்றுகிறார். படம் முழுக்க சேஸிங், பயரிங் என பரபரப்பாகவே செல்கிறது. படம் முழுக்க சிஜி காட்சிகள் நிறைந்திருந்தாலும், அவை கண்ணிற்கு உருத்தும் படியாக இல்லை. படம் ஆரம்பித்தல் இருந்து முடியும் வரை எங்கும் நிற்காமல் புல்லட் ரயில் போல் வேகமாக செல்கிறது, படத்தில் உள்ள சில சர்ப்ரைஸ் எளமெண்ட்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
பாலிவுட்டில் இருந்து வெளிவந்துள்ள மற்றொரு தேச பக்தி படம் பதான், தேசபக்தியை திணிக்கத் திணிக்க கொடுத்துள்ளார்கள், அது சில இடங்களில் சலிப்பை தட்டி விடுகிறது. மேலும் லாஜிக்கே இல்லாத பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. கிராவிட்டி என்றால் எத்தனை கிலோ என்றும் கேட்கும் அளவிற்கு தான் படம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவிய நிலையில் பதான் அதிலிருந்து மீட்கும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.