நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் இருந்தபோது விபத்தில் சிக்கினார். மலேசியாவின் லங்கா தீவில் கடலில் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டது. அங்கு படகு சேஸிங் காட்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரது படகு விபத்தில் சிக்கி நீரில் மூழ்கியது. இதில் படுகாயமடைந்திருந்த விஜய் ஆண்டனி உடனடியாக அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினரும் சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றனர்.
ஆரம்பகட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு அவசரப் பிரிவில் இருந்து மாற்றப்பட்ட விஜய் ஆண்டனி, அடுத்தக்கட்ட சிகிச்சைகளுக்காக சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னையில் இருக்கும் பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு மூக்கு மற்றும் தாடை பகுதியில் கடுமையான காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இது குறித்த அப்டேட்டை அவரே பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில்,” நான் பாதுகாப்பாக மீண்டுள்ளேன். மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின்போது மூக்கு மற்றும் தாடை பகுதியில் ஏற்பட்ட விபத்துக்கு இப்போது மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
— vijayantony (@vijayantony) January 24, 2023
என்னால் முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்களுடன் பேச முயற்சிக்கிறேன். உங்களின் அன்பு மற்றும் ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.