பியோங்யாங்: மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் சுவாச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெறும் அனைவரும் கடுமையான சளியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வடகொரியா இதனை கரோனா என்று குறிப்பிடவில்லை.
எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கு இடைவெளிகளில் உடலின் வெப்ப நிலை கண்காணிக்கப்படும் என்று வடகொரியா அரசு தெரிவித்துள்ள்து.
உலகம் முழுவதையும் கரோனா பெருந்தொற்று உலுக்கி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்தது வடகொரியா. இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் கரோனா தொற்று வடகொரியாவில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இப்போது, வடகொரியாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.