தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு

ஊட்டி: வனத்தில் தாயைப் பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட 2 யானை குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறி வளர்த்து ஆளாக்கிய ஊட்டி பழங்குடியின தம்பதியின் அனுபவத்தை, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக ஊட்டியைச் சேர்ந்த இயக்குனர் உருவாக்கியுள்ளார். இந்த ஆவண குறும்படம்தான் 95வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில், ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயைப் பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகள் போன்றவை பிடிக்கப்பட்டு இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளை பழங்குடியினத்தை சேர்ந்த பாகன்கள் பராமரித்து வருகின்றனர். இதில் காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாகப் பணிபுரிகின்றனர். கடந்த 2017ல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயிடம் இருந்து பிரிந்து காயத்துடன் சுற்றித்திரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் குட்டி யானை, முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, ரகு என்று பெயரிடப்பட்டது. அதுபோல், சத்தியமங்கலம் பகுதியில் 2018ம் ஆண்டு தாயைப் பிரிந்த மற்றொரு யானை அம்முவும் பராமரிக்கப்படுகிறது.

தாயைப் பிரிந்து தவித்த 2 யானை குட்டிகளைப் பராமரிக்கும் பணியை பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியிடம் ஒப்படைத்தனர். இத்தம்பதி இரு குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறி வளர்த்து ஆளாக்கினர். அவர்களின் கதையை ஊட்டியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், கடந்த இரு வருடங்களாக ஆவணப் படமாக்கி இருக்கிறார்.

‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ (Elephant Whisperers) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஆவண குறும்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த ஆவண குறும்படம் 95வது ஆஸ்கர் விருதுக்கான ஆவண குறும்பட பிரிவுக்கு தேர்வானது. இதையடுத்து விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இறுதிப் பட்டியலில் தேர்வாகும் பட்சத்தில் ஆஸ்கர் விருது கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.