பழனி கும்பாபிஷேகத்தில் பழனி ஆதீனம் புலிப்பாணி சித்தர் புறக்கணிப்பதாக அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி மலைக்கோவிலில் போகர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவபாஷாண சிலையை பராமரித்து வந்த போகர் சித்தரின் சீடரான புலிப்பாணி சித்தரின் கருவழி வாரிசான புலிப்பாணி ஆதினத்தை அழைக்காமல் கும்பாபிஷேகத்தை நடத்துவதாக கூறி, நேற்று இரவு பாஜக மற்றும் இந்துமுன்னணியினர் திருக்கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று பழனி ஆதினம் புலிப்பாணி சித்தரை, இந்து முன்னனியின் மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணி சந்தித்து பேசினார். தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை செய்த போகர் சித்தரின் சீடரான புலிப்பாணி சுவாமிகளின் கருவழி வந்த வாரிசுகளான, தற்போதைய ஆதினமான புலிப்பாணி பாத்திர சுவாமிகளின் பெயரை அழைப்பிதழில் போடாமல் அவமரியாதை செய்த திருக்கோவில் நிர்வாகம்,  அழைப்பிதழும் தராமல் இருப்பதை அறிந்து பொதுமக்கள் கோபத்திற்கு ஆளானதால், நாளை நடக்கவுள்ள கும்பாபிஷேகத்திற்கு இன்று மாலை அழைப்பிதழ்  கொடுத்துள்ளனர். எனவே புலிப்பாணி ஆதின தந்தை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் திருக்கோவில் நிர்வாகத்தை உண்மையாக கண்டிப்பதாகவும், பழனி மலை கோவிலுக்கு உரிமை பெற்ற புலிப்பாணி ஆதீனத்தை வேண்டாவிருப்பமாக அழைத்துள்ளதால், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆதீனம் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்தனர். 

தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முறையாக நடத்தவில்லை என்றும், உள்ளூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பழநிவாழ் மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் நிர்வாகத்தை கண்டிப்பதாகவும், பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய கும்பாபிஷேகத்தை காணும் நுழைவு சீட்டை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர். 

ஹிந்து விரோதமாக செயல்படும் திமுக அரசு தற்போது பழனி மலைக்கோவிலில்  மண்டல பூஜை நடத்தாமல் ஆகம விதிகளை மீறி செயல்படுவதாகவும் இது அரசுக்கும் முதல்வருக்கும் நல்லதல்ல என்றும், கிறிஸ்தவ விழாக்கள் மற்றும் இஸ்லாமிய விழாக்களில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஹிந்து விழாவான பழனிமலை கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இந்து முன்னனி மாநிலத்தலைவர் காடேஷ்வரா சுப்ரமணி தெரிவித்தார். பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தில் பழனி ஆதீனமான புலிப்பாணி சித்தர் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.