சென்னை அண்ணா சாலையில் கட்டடம் அனுமதியின்றி இடிப்பு – இளம்பெண் பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டி முருகேசன், பாண்டீஸ்வரி தம்பதியினரின் மகளான பத்மப்பிரியா (22), பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு சென்னை பம்மலில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். 

அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள யுனைடெட் டெக்னோ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி பணியில் சேர்ந்த பிரியா தினமும் சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் தினமும் பணிக்கு வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள நிறுவனத்திற்கு தனது சக ஊழியர் விக்னேஷ் ராஜாவுடன் நடந்து வந்துள்ளார். நிறுவனத்திற்கு அண்ணா சாலையில் உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்றுள்ளார். 

அப்போது அங்கு பழமைவாய்ந்த கட்டடம் உரிய பாதுகாப்பில்லாமல் இடிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் ஒரு பகுதி அண்ணாசாலை வழியாக விழுந்து உள்ளது. இதில் நடைபாதை வழியாக சென்ற பத்மபிரியா மற்றும் விக்னேஷ் ராஜா மீது விழுந்தது. 

இதில் உடல் நசுங்கி பத்மபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்னேஷ் ராஜா பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனியாருக்கு சொந்தமான பழைய கட்டடத்தை மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் கட்டடத்தை இடித்துள்ளனர். 

கட்டடத்தின் 75 சதவீத பகுதி இடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அண்ணா சாலை வழியாக இருக்கக்கூடிய கட்டடத்தின் முன் பகுதியை இடிக்காமல் வைத்துள்ளனர். கட்டடத்தின் பெரும்பாலான பகுதி இடிக்கப்பட்டதால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த முன் பகுதி இன்று காலை விழுந்துள்ளது. அதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி பத்மப்பிரியா உயிரிழந்திருக்கிறார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.