“அன்பு, மதம், கோட்பாடு, பண்பாடு என்ற பெயரில்…” – பெண்களுக்கு கனிமொழி எம்.பி எச்சரிக்கை

மதுரை: “பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை இன்னும் முழுமையாக பெறவில்லை” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.

மதுரை இம்.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில், அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “கல்லூரி என்பது மிகப்பெரும் கனவை சுமந்து கொண்டிருக்கும் கல்விச்சாலை.

மாணவிகளாகிய நீங்கள் பட்டங்களைப் பெற உங்களது பெற்றோர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள் என்று நீங்கள் உணரும் நாள். இந்த பட்டங்களை பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை சந்தித்திருக்கிறீர்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

பெண்கள் கல்வி கற்கக்கூடாது என கடும் எதிர்ப்பு இருந்தது. வீட்டு வேலையை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டும் என இந்த சமூகம் நினைத்தது. இதனால் பெண்கள் எதைப்பெற வேண்டுமானாலும் போராட வேண்டியிருந்தது. ஆனால், இன்று அந்த நிலை இல்லை. இருந்தாலும் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை இன்னும் முழுமையாக பெற்றுவிடவில்லை. இன்னும் மற்றவர்களை சார்ந்திருக்கும் சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை மாற்ற வேண்டும். இத்தகைய போக்கை மாற்றும் கடமை நாம் அத்தனை பேருக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள் எல்லாம் வரையறை வைத்திருப்பாா்கள். ஒருசில கருத்தியல்களை வைத்திருப்பார்கள். அந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்த தலைவர் பெரியார். அவரது வழியில் வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். அதற்காக பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளித்தார். அவரது வழியில் வந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தி தந்தவர்.

பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்களுக்கான இடம் இன்னும் விரிவடைய வேண்டும். அன்பு, மதம், கோட்பாடு, பண்பாடு என நமது உரிமையை பிடுங்கப் பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நாங்கள் இந்த கட்டத்தை எல்லாம், தவறுகளை எல்லாம் கடந்துவந்திருக்கிறோம். அதனால்தான் நீங்கள் இந்த தவறுகளை செய்துவிடக்கூடாது என எச்சரிக்கிறோம். உங்களுக்கு பின்னர் வரும் பெண்களின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. உங்கள் எண்ணம், உங்களின் நிலைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.