இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்

அவந்திபுரா: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஸ்ரீநகரில் இன்று தனது நடைபயணத்தை முடிக்கும் ராகுல், நாளை யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 12 மாநிலங்களை கடந்து 3,570 கிமீ பயணிக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் ராகுலின் நடைபயணம் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. காஷ்மீரை அடைந்துள்ள ராகுலின் பயணம், பாதுகாப்பு குறைபாடு காரணமாக நேற்று முன்தினம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அனந்த்நக் மாவட்டம் அவந்திபுரா பகுதியில் இருந்து நேற்று காலை 9.20 மணிக்கு மீண்டும் ராகுல் தனது யாத்திரையை தொடங்கினார். ராகுலுக்கு ஆதரவாக ஏராளமான தொண்டர்கள் நடைபயணத்தில் பங்கேற்றனர். பாதுகாப்பு குறைபாடு சர்ச்சை எழுந்ததால் நேற்று காஷ்மீர் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ராகுலை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள், செய்தியாளர்கள் மட்டுமே நடைபயண பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த யாத்திரையில், காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி மற்றும் அவரது மகள் இல்டிஜா முப்தி ஆகியோர் பங்கேற்றனர். லேத்போரா பகுதியில் ராகுலின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் நடைபயணத்தில் பங்கேற்றார். நேற்றைய யாத்திரை பன்தாசோக் பகுதியில் நிறைவடைந்தது. இன்று பன்தா சோக்கிலிருந்து போவ்லிவர்டு சாலையில் நேரு பூங்கா அருகில் யாத்திரை நிறைவடைகிறது. இன்றோடு நடைபயணத்தை நிறைவு செய்யும் ராகுல், நாளை எம்ஏ சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி, எஸ்கே ஸ்டேடியத்தில் நடக்கும் நிறைவுவிழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதில், 23 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

* கடந்த 2019ல் புல்வாமா தீவிரவாதிகளின் கார் வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்த லேத்போரா பகுதியில் ராகுல் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
* காஷ்மீரில் ராகுலின் நடைபயணத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கடிதம் எழுதினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.