'பெரியாரையும் அண்ணாவையும் பார்த்ததில்லை; ஆனால்..' – தொண்டர்கள் மத்தியில் உருகிய உதயநிதி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோயில் பகுதியில் பூரண கும்பம் மரியாதை, சிலம்பாட்டம், புலியாட்டம் ஆடி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் 60 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் கலைஞர் திடல் பகுதியில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

image
இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, “திருச்செங்கோடு பகுதியில் 42 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தெப்ப தேரோட்டத்தை இளைஞர் அணி செயலாளர் உதயநிதி அவர்களின் ஆசியோடு நடத்தினோம். அதேபோல 52 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தைப்பூச தேரோட்டத்தை நடத்த உள்ளோம். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் தேர் செய்யப்பட்டு 350 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. அதனை புதுப்பித்து கொடுக்க இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயாநிதி  அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அவரைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் பேசும்போது, “கழக மூத்த முன்னோடிகளை பெருமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என்று கேட்டு 22 மாவட்டங்களுக்கு மேலாக சென்று வந்துள்ளேன். உங்கள் முகங்களை பார்த்த போது தொடர் நிகழ்ச்சியில் கலந்து சோர்வாக இருந்த எனக்கு தானாக தெம்பு வந்துவிட்டது. அதற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்திலுக்கு நன்றி.

image
நாமக்கல் மேற்கு மாவட்ட முதல் நிகழ்ச்சியே கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி. நானும் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராகி இந்த ஊருக்கு வந்துள்ளேன். கழக மூத்த முன்னோடிகளை என்றும் மறக்கவே மாட்டோம். நான் பெரியார், அண்ணாவை பார்த்தது கிடையாது. ஆனால் அவரது பேச்சையும் புத்தகங்களையும் படித்துள்ளேன். கலைஞர் மற்றும் பேராசிரியர் ஆகியோரோடு பழகியுள்ளேன். அவர்களது பேச்சையும் கேட்டுள்ளேன். ஆனால் கழக மூத்தவர்கள் ஆன நீங்கள் அனைவரையும் பார்த்திருப்பார்கள். ஆகையால் உங்களை பார்க்கும்போது எனக்கே பொறாமையாகவும் உள்ளது. உங்கள் வடிவில் நான் பெரியாரையும் அண்ணாவையும் பார்க்கிறேன்.
இளைஞர் அணியின் வங்கி சேமிப்பில் உள்ள 24 கோடி ரூபாயிலிருந்து கிடைக்கும். வட்டி பணம் 10 லட்சம் ரூபாயை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த முடிவு செய்து மாற்றுத்திறனாளிகள் மருத்துவ உதவி தொகை தேவைப்படுவோர், கல்வி உதவித்தொகை தேவைப்படுவோர் ஆகியோருக்கு நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் 15 நபர்களுக்கும் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 15 நபர்களுக்கும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதனை அடுத்து 1,008 கட்சியின் மூத்த நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பணப்பரிசை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ் குமார் உள்ளிட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.