அமைச்சர் உதயநிதி கான்வாய்க்கு குறுக்கே புகுந்த சரக்கு வாகனம்! – சேலத்தில் பரபரப்பு

சேலத்திற்கு நேற்று முன்தினம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி வருகை புரிந்தார். அமைச்சராகப் பொறுப்பேற்று முதன் முறையாக சேலம் வருகைபுரிந்த அவருக்கு, உற்சாக வரவேற்பு கட்சித் தொண்டர்களால் கொடுக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்

சேலம் வந்த அமைச்சர் உதயநிதி, கட்சிப் பொறுப்பாளரின் திருமண நிகழ்வு, அரசு நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அன்று மாலை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சேலத்திலிருந்து எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கோவை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தபோது, எடப்பாடி அருகே கந்தன்பட்டி எனும் இடத்தில் அமைச்சர் உதயநிதிக்கு பாதுகாப்புக்காக முன்னே சென்று கொண்டிருந்த வி.ஐ.பி எஸ்கார்ட் வாகனம் முன்பு, திடீரென ஒரு குட்டியானை வாகனம், விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளே நுழைந்தது.

அதனை கவனித்த போலீஸார் விபத்து ஏற்படாமல் வாகனத்தை கட்டுப்படுத்தி நிறுத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட குட்டியானை வாகனத்தின் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அமைச்சர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போட்டிருந்தும், இத்தகைய சம்பவம் நடந்தது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீஸாரிடம் உயரதிகாரிகள் விளக்கம் கேட்டு, விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.